திருக்குர்ஆனின் சிறப்பும் அதை ஓதுவதன் சிறப்பும்
(ق) عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ. 456
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது , நாரத்தைப் பழம் போன்றதாகும் . அதன் மணமும் நன்று ; சுவையும் நன்று . குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும் . அதற்கு மணம் கிடையாது ; ( ஆனால் ,) அதன் சுவை இனிமையானது . குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது , துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதன் மணம் நன்று . அதன் சுவையோ கசப்பானது . குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது , குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதற்கு மணமும் கிடையாது ; அதன் சுவையும் கசப்பானதாகும் .
(ق) عَنْ عبد الله بن عمر , عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ . 457
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது . 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள , அவர் அதை அல்லும் பகலும் ஓதி ( அதன்படி செயல்பட்டு ) வருகிறார் . 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க , அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ ؟ قُلْنَا : نَعَمْ قَالَ : فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ . 458
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உங்களுள் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புவாரா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று பதிலளித்தோம் . அப்போது அவர்கள் , “ உங்களுள் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும் `` என்று கூறினார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا . 459
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) குர்ஆன் உடையவரிடம் ( மனனம் செய்தவரிடம் ) “ உலகில் அதை நீர் நிறுத்தி நிறுத்தித் தெளிவாக ஓதிக்கொண்டிருந்ததைப்போல் ஓதிக்கொண்டே முன்னேறிச் செல்வீராக . நீர் ஓதுகின்ற கடைசி வசனத்தின் இடத்தில் உம்முடைய தங்குமிடம் உள்ளது ” என்று சொல்லப்படும் .
عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ . 460
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் வேதத்தில் ( குர்ஆனில் ) ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு . ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை ( என்ற அடிப்படையில் அவருக்கு ) உண்டு . ` அலிஃப் லாம் மீம் ` என்பது ஓர் எழுத்தாகும் என்று நான் கூறமாட்டேன் . மாறாக , அலிஃப் என்பது ஓர் எழுத்தாகும் ; லாம் என்பது ஓர் எழுத்தாகும் ; மீம் என்பது ஓர் எழுத்தாகும் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ . 461
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ திண்ணமாக அல்லாஹ்வுக்கு மக்களிலிருந்து குடும்பத்தினர் உள்ளனர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று ( தோழர்கள் ) வினவினர் . “ அவர்கள்தாம் குர்ஆனை உடையவர்கள் ; அல்லாஹ்வின் குடும்பத்தினர் ; அவனோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ كَانَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا يَغُرَّنَّكُمْ هَذِهِ الْمَصَاحِفُ الْمُعَلَّقَةُ فَإِنَّ اللَّهَ لَنْ يُعَذِّبَ قَلْبًا وَعَى الْقُرْآنَ . 462
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் . ( இங்கு ஆணியில் ) மாட்டப்பட்டுள்ள இந்தக் குர்ஆன் பிரதிகள் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைப் பாதுகாத்த உள்ளத்தை ஒருபோதும் வேதனைப்படுத்த மாட்டான் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا يَمْنَعُ أَحَدَكُمْ إِذَا رَجَعَ مِنْ سُوقِهِ أَوْ مِنْ حَاجَتِهِ فَاتَّكَأَ عَلَى فِرَاشِهِ أَنْ يَقْرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ الْقُرْآنِ . 463
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் கடைவீதியிலிருந்து அல்லது தம் தேவையிலிருந்து திரும்பி , ( உறங்குவதற்காகத் ) தம் விரிப்பில் சாய்ந்தால் , குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களை ( யேனும் ) ஓதுவதிலிருந்து தடுத்துவிட வேண்டாம் .
(ق) عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَمَثَلُ الَّذِي يَقْرَأُ وَهُوَ يَتَعَاهَدُهُ وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ . 464
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : குர்ஆனை மனனமிட்டு ( ச் சிரமமின்றி ) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க ( ளான வானவர்க ) ளைப் போன்றவராவார் . குர்ஆனை ( மனனம் செய்திராவிட்டாலும் அதனைச் ) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு .
(ق) عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ . 465
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ( ப் பார்த்தோ மனப்பாடமாகவோ ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம் , கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டக உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது . அதனை அவர் கண்காணித்து வந்தால் தம்மிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம் . அதை அவிழ்த்துவிட்டு விட்டாலோ அது ஓடிப்போய்விடும் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ . 466
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் `` என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும் . வேண்டுமானால் , " மறக்க வைக்கப்பட்டு விட்டது ` என்று அவர் கூறட்டும் ! குர்ஆனைத் தொடர்ந்து ( ஓதி ) நினைவுபடுத்தி வாருங்கள் . ஏனெனில் , ஒட்டகங்களைவிட வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் .
عَنْ السَّائِبُ بْنُ يَزِيدَ : أَنَّ شُرَيْحًا الْحَضْرَمِيَّ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَسَّدُ الْقُرْآنَ . 467
சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜுரைஹ் அல்ஹள்ரமீ என்பாரைக் குறித்துக் கூறப்பட்டது . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ குர்ஆனைத் தலையணையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் ” என்று கூறினார்கள் .
(خ ) عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ . 468
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனைத் தாமும் கற்று , பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களுள் சிறந்தவர் .
(خ) عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا جَمَعْتُ الْمُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ وَمَا الْمُحْكَمُ قَالَ الْمُفَصَّلُ . 469
சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வாழ்ந்த ) காலத்திலேயே " அல் முஹ்கம் ` அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் `` என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நான் அவர்களிடம் , “ அல்முஹ்கம் என்றால் என்ன ?`` என்று கேட்டேன் . அவர்கள் “ அல்முஃபஸ்ஸல்`தான் (" அல்முஹ்கம் `)`` என்று ( பதில் ) சொன்னார்கள் .
(ق) شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ قَالَ فَرَجَّعَ فِيهَا . 470
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா பின் குர்ரா ரஹிமஹுல்லாஹ் , " அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ ரளியல்லாஹு அன்ஹு மக்கா வெற்றி நாளில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது ஒட்டகம் ஒன்றின்மீது இருந்தபடி " அல் ஃபத்ஹ் எனும் (48ஆம்) அத்தியாயத்தை ` அல்லது " அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை ` ஓதிக்கொண்டிருக்கக் கண்டேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " தர்ஜீஉ ` எனும் ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள் `` எனக் கூறிவிட்டு , இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள் . பிறகு , “ உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய விதத்தை இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன் `` என்று சொன்னார்கள் . நான் , முஆவியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி ?`` என்று கேட்க ("ஆ` எனும் இடத்தில் ) ‘ஆ...ஆ...ஆ...` என்று மும்முறை ( இழுத்து ) அவர்கள் ஓதினார்கள் `` எனச் சொன்னார்கள் .
(خ) عَنْ قَتَادَةَ قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَتْ مَدًّا ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَمُدُّ بِبِسْمِ اللَّهِ وَيَمُدُّ بِالرَّحْمَنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ . 471
கத்தாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓதல் முறை எப்படியிருந்தது ?`` என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு , " பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ` என்பதில் " பிஸ்மில்லா ... ஹ் ` என நீட்டுவார்கள் ; " அர்ரஹ்மா ... ன் ` என்றும் நீட்டுவார்கள் ; " அர்ரஹீ ... ம் ` என்றும் நீட்டுவார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ فَقَالَ قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ؟! لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنْ الْمُفَصَّلِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ . 472
அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து , “ நான் நேற்றிரவு " அல்முஃபஸ்ஸல் ` அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன் `` என்று கூறினார் . அதற்கு இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த ஒத்த ( பொருள் கொண்ட ) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் `` என்று கூறிவிட்டு , அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள் .
عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ أُرَاهَا حَفْصَةَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّكُمْ لَا تَسْتَطِيعُونَهَا قَالَ فَقِيلَ لَهَا أَخْبِرِينَا بِهَا قَالَ فَقَرَأَتْ قِرَاءَةً تَرَسَّلَتْ فِيهَا قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ فَحَكَى لَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ قَطَّعَ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ قَطَّعَ مَالِكِ يَوْمِ الدِّينِ . 473
இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியருள் ஒருவரிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக அபூஆமிர் ரஹிமஹுல்லாஹ் சொன்னார் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( தொழுகையில் குர்ஆன் ) ஓதிய விதம் குறித்து ( அவர்களின் துணைவியார் ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வினவப்பட்டபோது , “ அ( வ்வாறு ஓதுவ ) து உங்களால் இயலாது ” எனக் கூறினார்கள் . “ அதை நீங்கள் எங்களுக்கு அறிவியுங்கள் ” என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது . அப்போது அவர்கள் , நிறுத்தி நிதானமாக ஓதிக்காட்டினார்கள் . இப்னு அபீமுலைகா எங்களுக்குக் கூறியதாக நாஃபி கூறினார் என்று அபூஆமிர் சொன்னதாவது : அல்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ( ஓதி ) நிறுத்தினார் . அர்ரஹ்மான் னிர்ரஹீம் என்று ( ஓதி ) நிறுத்தினார் . பிறகு மாலிகி யவ்மித்தீன் என்று ஓதி ( நிறுத்தி ) னார் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ . 474
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை .
(ق) عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ . 475
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி ) “ அபூமூஸா ! ( இறைத்தூதர் ) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ( சங்கீதம் போன்ற ) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது `` என என்னிடம் கூறினார்கள் .
عَنْ الْبَرَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ . 476
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அல்பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்களின் குரல்களால் குர்ஆனை அழகாக்குங்கள் .
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ أَبْطَأْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بَعْدَ الْعِشَاءِ ثُمَّ جِئْتُ فَقَالَ أَيْنَ كُنْتِ قُلْتُ كُنْتُ أَسْتَمِعُ قِرَاءَةَ رَجُلٍ مِنْ أَصْحَابِكَ لَمْ أَسْمَعْ مِثْلَ قِرَاءَتِهِ وَصَوْتِهِ مِنْ أَحَدٍ قَالَتْ فَقَامَ وَقُمْتُ مَعَهُ حَتَّى اسْتَمَعَ لَهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ هَذَا سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا . 477
அப்துர் ரஹ்மான் பின் ஸாபித் அல்ஜுமஹீ ரளியல்லாஹு அன்ஹு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஷாவுக்குப்பின் ஓர் இரவில் தாமதமாக வந்தேன் . இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய் ? என்று என்னிடம் நபியவர்கள் வினவினார்கள் . உங்களுடைய தோழர்களுள் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன் . அவருடைய ஓதலைப் போன்றும் குரலைப் போன்றும் யாரிடமிருந்தும் நான் ( இதுவரை ) செவியுற்றதில்லை என்று கூறினேன் . எனவே அவர்கள் எழுந்து சென்றார்கள் . நானும் அவர்களுடன் சென்றேன் . அவர் ஓதுவதைச் செவியுற்றார்கள் . பின்னர் என்னைத் திரும்பிப் பார்த்து , “ இவர் அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமை சாலிம் ஆவார் . இவரைப் போன்றவரை என் சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .
عَنْ مُحَمَّدٍ قَالَ كَانُوا يَرَوْنَ هَذِهِ الْأَلْحَانَ فِي الْقُرْآنِ مُحْدَثَةً . 478
முஹம்மது பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( எமது காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் ) குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதைப் புதுமையான செயலாகக் கருதினார்கள் .
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَبَا مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقْرَأُ ذَاتَ لَيْلَةٍ ، فَمَشَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ ، فَلَمَّا أَصْبَحَ قِيَلَ لَهُ ، قَالَ : لَوْ عَلِمْتُ لَحَبَّرْتُ لَكَ تَحْبِيرًا وَلَشَوَّقْتُ لَكَ تَشْوِيقًا . 479
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு நாள் இரவு அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனை ) ஓதிக்கொண்டிருந்தார் . அதைக் கேட்டுக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . ( நேற்றிரவு உம்முடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்ற ) இச்செய்தி அவர்களிடம் காலையில் சொல்லப்பட்டது . “( என்னுடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்பது ) எனக்குத் தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகிய தொனியில் இனிமையாக ஓதியிருப்பேனே ” என்று கூறினார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِكُلِّ شَيْءٍ حِلْيَةً ، وَحِلْيَةُ الْقُرْآنِ الصَّوْتُ الْحَسَنُ . 480
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அழகு உண்டு . குர்ஆனின் அழகு அழகிய குரல்தான் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَحْسَنُ قِرَاءَةً ؟ قَالَ : الَّذِي إِذَا سَمِعْتَهُ يَقْرَأُ رَأَيْتَ أَنَّهُ يَخْشَى اللَّهَ عَزَّ وَجَلَّ . 481
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அழகிய முறையில் ஓதுபவர் யார் ?” என்று கேட்கப்பட்டது . “ அவர் ஓதுவதை நீ செவியுற்றால் , அவர் வல்லமையும் மகத்துவமும் கொண்ட அல்லாஹ்வை அஞ்சு ( ம் நிலையில் ஓது ) கிறார் என நீ கருதுவாய் ” என்று பதிலுரைத்தார்கள் .
(ق) عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ . 482
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள் . ( அதன் கருத்தை அறிவதில் ) உங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தால் அ( ந்த இடத் ) தைவிட்டு எழுந்து ( சென்று ) விடுங்கள் .
(خ) عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَجُلًا قَرَأَ آيَةً وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ خِلَافَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا . 483
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன் . அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓத நான் கேட்டிருந்தேன் . ஆகவே , அவரை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன் . அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி ( யின் சாயல் ) படிந்திருப்பதை உணர்ந்தேன் . அவர்கள் , “ நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் . ( எல்லா விஷயங்களிலும் ) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் . ஏனெனில் , உங்களுக்கு முன்னிருந்தவர்கள் ( ஒவ்வொரு விஷயத்திலும் ) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்து போனார்கள் `` என்று சொன்னார்கள்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا قَالَ لِي كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ . 484
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுக !`` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( என்னிடம் ) கூறினார்கள் . அதற்கு நான் , “ தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா ?`` என்று கேட்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன் `` என்று சொன்னார்கள் . நான் " அந்நிஸா ` எனும் (4ஆம்) அத்தியாயத்தை ஓதினேன் . “ ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ( அவர்களுடைய நபியாகிய ) சாட்சியை நாம் ( மறுமையில் ) கொண்டுவரும்போதும் , ( நபியே !) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் ( இவர்களின் நிலை ) எப்படியிருக்கும் ?`` எனும் (4:41ஆம்) வசனத்தை நான் அடைந்தபோது " நிறுத்துங்கள் ` என்று சொன்னார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை நான் கண்டேன் .
(ق ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلَا تَزِدْ عَلَى ذَلِكَ . 485
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஒவ்வொரு மாதமும் ( ஒரு முறை குர்ஆனை ) ஓதி நிறைவுசெய் !`` என்று கூறினார்கள் . அப்போது நான் , “( அதைவிடக் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் ) சக்தி எனக்கு உள்ளது `` என்று கூறினேன் . அப்படியானால் , ஏழு நாட்களில் ( ஒரு முறை ) ஓதி நிறைவுசெய் ; அதைவிட ( ஓதுவதை ) அதிகமாக்கிவிடாதே `` என்று சொன்னார்கள் .
(م ) عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنْ اللَّيْلِ . 486
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதி வருபவற்றை , அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜ்ர் தொழுகைக்கும் லுஹ்ர் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு ( நன்மை ) எழுதப்படுகிறது .
(م) عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ . 487
ஆமிர் பின் வாஸிலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு , ( கலீஃபா ) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள் . ( இக்காலக் கட்டத்தில் ) உமர் ரளியல்லாஹு அன்ஹு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு ( நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ) “ நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு ( மக்கா ) வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “( அப்துர் ரஹ்மான் ) இப்னு அப்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை `` என்று பதிலளித்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்னு அப்ஸா யார் ?`` எனக் கேட்டார்கள் . நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் ( முன்னாள் ) அடிமைகளுள் ஒருவர் `` எனப் பதிலளித்தார்கள் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் (- இப்னு அப்ஸா ) இறை வேதத்தை அறிந்தவர் ; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர் `` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உமர் ரளியல்லாஹு அன்ஹு “ அறிந்துகொள்க ! அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான் ; வேறு சிலரைத் தாழ்த்துகிறான் `` என்று உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் . ( இப்னு அப்ஸா வேத அறிவால் மேன்மை பெற்றுவிட்டார் )`` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ . 488
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனுடன் ( திருக்குர்ஆன் பிரதியுடன் ) எதிரி நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள் .
عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّتَكَ سَتُفْتَتَنُ مِنْ بَعْدِكَ قَالَ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سُئِلَ مَا الْمَخْرَجُ مِنْهَا قَالَ الْكِتَابُ الْعَزِيزُ الَّذِي لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ مَنْ ابْتَغَى الْهُدَى فِي غَيْرِهِ أَضَلَّهُ اللَّهُ وَمَنْ وَلِيَ هَذَا الْأَمْرَ مِنْ جَبَّارٍ فَحَكَمَ بِغَيْرِهِ قَصَمَهُ اللَّهُ هُوَ الذِّكْرُ الْحَكِيمُ وَالنُّورُ الْمُبِينُ وَالصِّرَاطُ الْمُسْتَقِيمُ فِيهِ خَبَرُ مَنْ قَبْلَكُمْ وَنَبَأُ مَا بَعْدَكُمْ وَحُكْمُ مَا بَيْنَكُمْ وَهُوَ الْفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ وَهُوَ الَّذِي سَمِعَتْهُ الْجِنُّ فَلَمْ تَتَنَاهَى أَنْ قَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ وَلَا يَخْلَقُ عَنْ كَثْرَةِ الرَّدِّ وَلَا تَنْقَضِي عِبَرُهُ وَلَا تَفْنَى عَجَائِبُهُ . 489
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹாரிஸ் அல்அஃவர் கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுடைய சமுதாயம் உங்களுக்குப் பிறகு சோதனைக்கு உள்ளாக்கப்படுமா ? என்று கேட்கப்பட்டது . ( அதற்கு அவர்கள் ஆம் என்றதும் ) உடனே நான் , " அதிலிருந்து விடுபட வழி என்ன ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் வேதம் ( குர்ஆனைக் கடைப்பிடிப்பதுதான் வழி ). ‘ இதற்கு முன்னும் சரி , இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் ( திருக்குர்ஆனாகிய ) இதனை ( அணுகவே ) அணுகாது . மிக்க புகழும் ஞானமும் உடையவனால் ( இது ) இறக்கப்பட்டது .’ (41: 42) என்று அல்லாஹ் கூறுகின்றான் . அதை விட்டுவிட்டு மற்றவற்றில் யார் நல்வழியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிடுவான் . அதை யார் அகம்பாவத்துடன் புறக்கணித்துச் சென்று , அது அல்லாத மற்றதைக் கொண்டு தீர்ப்பளித்தாரோ அவரை ( அவரது கழுத்தை ) அல்லாஹ் முறித்துவிடுவான் . அதுதான் ஞானமிக்க அறிவுரை ; தெளிவான ஒளி ; நேரிய வழி . அதில் உங்களுக்கு முந்தையவர்கள் பற்றிய வரலாறும் , உங்களுக்குப் பின்னால் நிகழவிருப்பது பற்றிய செய்தியும் , உங்கள் மத்தியில் நிகழும் விவகாரங்களுக்குத் தீர்ப்புகளும் உள்ளன . அதுதான் ( சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்துக்காட்டும் ) தெளிவாகும் ; அது கேலிக்குரியதன்று . அதைச் செவியுற்ற ஜின்களைக்கூட , ` நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் . அது நேர்வழியைக் காட்டுகிறது ` (72:1-2) என்று இறுதியில் கூறவைத்தது . ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்ப அதைக் கையாண்டாலும் அது இற்றுப் போய்விடாது . அதன் படிப்பினைகள் முடிவுறா ; அதன் ஆச்சரியங்கள் முற்றுப் பெறா . பிறகு அலீ ரளியல்லாஹு அன்ஹு ஹாரிஸிடம் , " அஃவரே ! இந்த அறிவுரையைப் பெற்று உம்மிடம் ( மனனமாக ) வைத்துக்கொள் " என்றார்கள் .
عَنْ كَعْبٍ قَالَ عَلَيْكُمْ بِالْقُرْآنِ فَإِنَّهُ فَهْمُ الْعَقْلِ وَنُورُ الْحِكْمَةِ وَيَنَابِيعُ الْعِلْمِ وَأَحْدَثُ الْكُتُبِ بِالرَّحْمَنِ عَهْدًا وَقَالَ فِي التَّوْرَاةِ يَا مُحَمَّدُ إِنِّي مُنَزِّلٌ عَلَيْكَ تَوْرَاةً حَدِيثَةً تَفْتَحُ فِيهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا . 490
கஅபுல் அஹ்பார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைப் பற்றிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் அது அறிவின் விளக்கம் ; ஞானத்தின் ஒளி ; கல்வியின் ஊற்றுகள் . ரஹ்மானாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் புதியது . அல்லாஹ் தவ்ராத்தில் சொல்லியுள்ளான் : முஹம்மதே ! நிச்சயமாக நான் உமக்கு புதியதொரு தவ்ராத்தை இறக்கியருளப்போகின்றேன் . அது குருட்டுக் கண்களையும் செவிட்டுக் காதுகளையும் திரையிடப்பெற்ற உள்ளங்களையும் திறக்கும் .
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِنَّ هَذَا الْقُرْآنَ مَأْدُبَةُ اللَّهِ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ فَإِنِّي لَا أَعْلَمُ شَيْئًا أَصْفَرَ مِنْ خَيْرٍ مِنْ بَيْتٍ لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ وَإِنَّ الْقَلْبَ الَّذِي لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ خَرِبٌ كَخَرَابِ الْبَيْتِ الَّذِي لَا سَاكِنَ لَهُ . 491
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வுடைய விருந்தாகும் . எனவே அதிலிருந்து உங்களால் இயன்ற வரை எடுத்துக்கொள்ளுங்கள் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத வீட்டைவிட நன்மை அறவே இல்லாத எதையும் நான் அறியேன் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத உள்ளம் , குடியிருப்பவர் யாருமில்லாத பாழடைந்த வீட்டைப் போன்றதாகும் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدَرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لَا يُوحَى إِلَيْهِ ، لَا يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَحِدَّ مَعَ مَنْ حَدَّ ، وَلَا يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلَامُ اللَّهِ تَعَالَ . 492
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் குர்ஆனை ஓதினாரோ அவர் நபித்துவத்தைத் தம் இரு புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டுவிட்டார் ( என்று பொருள் ). எனினும் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதில்லை . குர்ஆனை உடையவர் ( மனனம் செய்தவர் ) தம்முடன் கோபப்படுபவர் மீது கோபப்படக்கூடாது . தம்மோடு அறிவற்ற நிலையில் நடந்து கொள்பவரோடு அறிவற்ற நிலையில் நடந்துகொள்ளக்கூடாது . ( ஏனென்றால் ) அவருடைய உள்ளத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) உள்ளது .
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ : أَدْرَكْتُ النَّاسَ مُنْذُ سَبْعِينَ سَنَةٍ ، يَقُولُونَ : اللَّهُ الْخَالِقُ ، وَمَا سِوَاهُ مَخْلُوقٌ ، وَالْقُرْآنُ كَلَامُ اللَّهِ . 493
அம்ர் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்பாளன் ; அவன் அல்லாதவை யாவும் படைக்கப்பட்டவை ; குர்ஆன் மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) என்று சொல்லக்கூடிய மக்களையே எழுபது ஆண்டுகளாக நான் கண்டுவருகிறேன் .
عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ كَلَامِ اللَّهِ عَلَى كَلَامِ خَلْقِهِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ . 494
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஷஹ்ர் பின் ஹவ்ஷப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுடைய பேச்சைவிட அல்லாஹ்வுடைய பேச்சின் சிறப்பு அல்லாஹ்வுடைய படைப்புகளைவிட அவனுடைய சிறப்பைப் போன்றது .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ اسْتَمَعَ إِلَى آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا . 495
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யார் ஒரு வசனத்தைச் செவியுற்றாரோ அது அவருக்கு ஒளியாக ஆகிவிடும் .
عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ إِنَّ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ لَهُ أَجْرٌ وَإِنَّ الَّذِي يَسْتَمِعُ لَهُ أَجْرَانِ . 496
காலித் பின் மஅதான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : குர்ஆனை ஓதுபவருக்கு ஒரு கூலி உண்டு . அதைச் செவியுறுபவருக்கு இரண்டு கூலி உண்டு .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَدْرِ مَا يَسْمَعُهُ مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ . 497
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் அவர்கள் வீட்டிலிருந்து ஓதும்போது அறையில் உள்ளவர்கள் செவியுறும் அளவிற்கு ( ச் சத்தமாக ) அமைந்திருந்தது .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ يَرْفَعُ طَوْرًا وَيَخْفِضُ طَوْرًا . 498
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் இரவில் சிலவேளை உயர்ந்தும் சிலவேளை தாழ்ந்தும் அமைந்திருந்தது .
عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ قَالَ وَمَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ قَالَ فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ قَالَ قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَقَالَ لِعُمَرَ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ قَالَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ زَادَ الْحَسَنُ فِي حَدِيثِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا وَقَالَ لِعُمَرَ اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا . 499
அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓர் இரவு வெளியே சென்றார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தமது சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் சென்றபோது அவர்கள் தமது சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒன்று கூடியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அபூபக்ரே ! நான் உங்களுக்கு அருகில் வந்தபோது நீங்கள் சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று சொன்னார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நான் யாருடன் இரகசியமாக உரையாடினேனோ அ( ந்த இறை ) வனுக்குச் செவியுறச் செய்துவிட்டேன் ” என்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ நான் உங்களுக்கு அருகில் வந்தேன் . நீங்கள் உங்கள் சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று கூறியதும் “ அல்லாஹ்வின் தூதரே ! அரைகுறையான தூக்கத்திலிருப்பவர்களை விழிக்கச் செய்கின்றேன் ; ஷைத்தானை விரட்டிவிடுகின்றேன் ” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . “ அபூபக்ரே ! உங்கள் சத்தத்தைச் சற்று உயர்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ உங்கள் சத்தத்தைச் சற்றுத் தாழ்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என ஹஸன் ரஹிமஹுல்லாஹ் தமது அறிவிப்பில் கூடுதலாக அறிவித்துள்ளார் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ فَكَشَفَ السِّتْرَ وَقَالَ أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ أَوْ قَالَ فِي الصَّلَاةِ . 500
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளியில் இஃதிகாஃப் இருந்தபோது மக்கள் சத்தமிட்டு ( குர்ஆன் ) ஓதுவதைச் செவியுற்றார்கள் . உடனே , அவர்கள் திரையை நீக்கி “ அறிந்து கொள்ளுங்கள் ! நீங்கள் அனைவரும் உங்களுடைய இறைவனிடம் உரையாடுகின்றீர்கள் . எனவே உங்களுள் ஒருவர் இன்னொருவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் . உங்களுள் ஒருவர் ( குர்ஆன் ) ஓதும்போது அல்லது ( அறிவிப்பாளருக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது ) தொழும்போது இன்னொருவரைவிட ( ச் சத்தத்தை ) உயர்த்த வேண்டாம் ” என்று கூறினார்கள் .
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ . 501
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைச் சத்தமிட்டு ஓதுபவர் தர்மத்தைப் பகிரங்கமாக வழங்கியவர் போலாவார் . குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் தர்மத்தை இரகசியமாக வழங்கியவர் போலாவார் .
عَنْ ابْنِ الْهَادِ قَالَ سَأَلَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ فَقَالَ لِي فِي كَمْ تَقْرَأُ الْقُرْآنَ ؟ فَقُلْتُ : مَا أُحَزِّبُهُ فَقَالَ لِي نَافِعٌ لَا تَقُلْ مَا أُحَزِّبُهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَرَأْتُ جُزْءًا مِنْ الْقُرْآنِ قَالَ حَسِبْتُ أَنَّهُ ذَكَرَهُ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . 502
யஸீத் பின் அப்தில்லாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் அவர்கள் என்னிடம் , “ நீங்கள் எத்தனை நாள்களில் குர்ஆனை ( முழுமையாக ) ஓதுவீர்கள் ” என்று கேட்டார்கள் . “ நான் குறிப்பிட்ட அளவை வழமையாக்கி ஓதுவதில்லை ” என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் “ குறிப்பிட்ட ‘ அளவை ( ஹிஸ்பு ) வழமையாக்கி ஓதுவதில்லை ’ என்று கூறாதீர்கள் . ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் குர்ஆனில் ஒரு ( குறிப்பிட்ட ) பகுதியை ( ஜுஸ்வு ) ஓதினேன் என்று கூறியிருக்கிறார்கள் ” எனச் சொன்னார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ شَيْئًا ، فَلَمَّا أَصْبَحَ قِيلَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ يَتَبَيَّنُ ، قَالَ : إِنِّي إِنَّمَا عَلَى مَا تَرَوْنَ بِحَمْدِ اللَّهِ ، قَدْ قَرَأْتُ السَّبْعَ الطِّوَالَ . 503
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் இரவு சிறிதளவு வலியை உணர்ந்தார்கள் . காலையில் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுக்கு வலி மிகவும் வெளிப்படையானதுதான் ” என்று சொல்லப்பட்டது . அதற்கு அவர்கள் , “ அறிந்து கொள்க ! நீங்கள் பார்ப்பதைப் போன்று ( சாதாரணமானவன் ) தான் நான் . அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . ( அந்த வலியோடு ) நேற்றிரவு நீண்ட நெடிய ஏழு அத்தியாயங்களை ஓதியிருக்கிறேன் ” என்றார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا . 504
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தார் செய்த ( நல்லறங்களுக்கான ) நற்பலன்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . எந்த அளவிற்கென்றால் ஒரு மனிதர் பள்ளிவாசலிலிருந்து அகற்றும் அசுத்தம்கூட ( அந்த நற்பலன்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன ). என் சமுதாயத்தாரின் பாவங்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . ( அதில் ) குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயம் அல்லது ஒரு வசனம் வழங்கப்பட்டு , பின்னர் அதை மறந்துவிட்ட மனிதர் புரிந்த பாவத்தைவிடப் பெரும் பாவம் எதையும் நான் காணவில்லை .
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ فَقَالَ اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ . 505
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களிடம் வந்தார்கள் . எங்களில் அரபியர்களும் அரபியர்கள் அல்லாதோரும் இருந்தனர் . நீங்கள் ஓதுங்கள் , அனைத்தும் அழகாகத்தான் இருக்கின்றது . அம்பைச் சீர்செய்வதைப் போன்று குர்ஆனைச் சீராக ஓதக்கூடிய கூட்டங்கள் பின்னால் தோன்றும் . அவர்கள் இதன்மூலம் ( உலகத்திலேயே கூலியை ) விரைவாக எதிர்பார்ப்பார்கள் . ( அதன் கூலியை மறுமையில் பெறுவதற்காகக் ) காத்திருக்க மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
عَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغْلُوا فِيهِ وَلَا تَجْفُوا عَنْهُ وَلَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَكْثِرُوا بِهِ . 506
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் ; அதில் வரம்பு மீறாதீர்கள் ; அதைப் புறக்கணிக்காதீர்கள் ; அதை வைத்துக்கொண்டு ( ஆதாயம் தேடிச் ) சாப்பிடாதீர்கள் ; அதைக் கொண்டு ( பொருளாதாரத்தை ) அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ عَشْرَ آيَاتٍ كُتِبَ مِنْ الذَّاكِرِينَ وَمَنْ قَرَأَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنْ الْقَانِتِينَ وَمَنْ قَرَأَ بِخَمْسِ مِائَةِ آيَةٍ إِلَى الْأَلْفِ أَصْبَحَ وَلَهُ قِنْطَارٌ مِنْ الْأَجْرِ قِيلَ وَمَا الْقِنْطَارُ قَالَ مِلْءُ مَسْكِ الثَّوْرِ ذَهَبًا . 507
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வை ) நினைவுகூருவோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) ஐந்நூறு முதல் ஆயிரம் வசனங்களை ஓதுகிறாரோ அவருக்கான கூலியாக ஒரு ‘ கின்த்தார் ’ உண்டு என்று கூறினார்கள் . ‘ கின்த்தார் ’ என்றால் எவ்வளவு என்று கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ ஒரு காளை மாட்டின் தோல் நிறையத் தங்கம் ஆகும் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ بِخَمْسِينَ آيَةً لَمْ يُكْتَبْ مِنْ الْغَافِلِينَ . 508
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் ஐம்பது வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ حَافَظَ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، وَمَنْ قَرَأَ فِي لَيْلَةٍ مِائَةَ آيَّةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، أَوْ كُتِبَ مِنَ الْقَانِتِينَ . 509
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கடமையான தொழுகைகளைப் பேணிவருகின்றாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . யார் ஓர் இரவில் நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . அல்லது ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ فِي لَيْلَةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ . 510
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .
عَنْ الْحَكَمِ عَنْ مُجَاهِدٍ قَالَ بَعَثَ إِلَيَّ قَالَ إِنَّمَا دَعَوْنَاكَ أَنَّا أَرَدْنَا أَنْ نَخْتِمَ الْقُرْآنَ وَإِنَّهُ بَلَغَنَا أَنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ عِنْدَ خَتْمِ الْقُرْآنِ قَالَ فَدَعَوْا بِدَعَوَاتٍ . 511
ஹகம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் என்னிடம் ஆள் அனுப்பினார்கள் . ( நான் அவர்களிடம் சென்றேன் ). “ நாங்கள் குர்ஆனை ( ஓதி ) முடிக்க நாடியுள்ளோம் ; எனவேதான் உங்களை நாங்கள் அழைத்தோம் . ( ஏனென்றால் ) குர்ஆனை முடிக்கின்றபோது ( கேட்கப்படுகின்ற ) பிரார்த்தனை ஏற்கப்படுகிறது என எங்களுக்குச் செய்தி கிடைத்தது ” என்றார்கள் . ( அதன்பிறகு ) அவர்கள் நீண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்கள் .
عَنْ إِبْرَاهِيمَ قَالَ إِذَا قَرَأَ الرَّجُلُ الْقُرْآنَ نَهَارًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَرَأَهُ لَيْلًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُصْبِحَ . 512
இப்ராஹீம் அந்நகஈ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் பகலில் குர்ஆனை ஓதினால் வானவர்கள் அவர்மீது மாலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . அதை அவர் இரவில் ஓதினால் வானவர்கள் அவர்மீது காலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : சுலைமான் அல்அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : நம்முடைய தோழர்கள் பகலின் தொடக்கத்திலும் ( காலை ) இரவின் தொடக்கத்திலும் ( மாலை ) குர்ஆனை முடிக்க விரும்புவதை நான் கண்டேன் . ( அதாவது குர்ஆனை முடிக்கின்ற துஆவைக் காலையில் அல்லது மாலையில் ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள் .)
عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ بِكِتَابٍ فِيهِ الْفَرَائِضُ وَالسُّنَنُ وَالدِّيَاتُ ، وَبَعَثَ بِهِ مَعَ عَمْرِو بْنِ حَزْمٍ . فَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ قَالِ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 513
அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யமன்வாழ் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் . அதில் வாரிசுரிமைச் சட்டங்கள் , சுன்னத்தான நடைமுறைகள் , உயிர் இழப்பீட்டுச் சட்டங்கள் ஆகியவை இருந்தன . அதை அம்ர் பின் ஹஸ்ம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள் . அது ஒரு நீண்ட ஹதீஸ் . அதில் “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் ” என்று ( எழுதப்பட்டு ) இருந்தது .
عَنْ عَبدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 514
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் .”
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ قَالَ كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَاحْتَكَكْتُ فَقَالَ سَعْدٌ لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ قَالَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ قُمْ فَتَوَضَّأْ فَقُمْتُ فَتَوَضَّأْتُ ثُمَّ رَجَعْتُ . 515
முஸ்அப் பின் சஅத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( என் தந்தை ) சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் குர்ஆன் பிரதியைப் பிடித்துக்கொண்டிருந்தேன் . அப்போது நான் அதை ( நேரடியாகத் தொடாமல் ) என் கீழாடை மூலம் பிடித்தேன் . அச்சமயத்தில் சஅத் அவர்கள் , “ நீ உன்னுடைய ( கையால் ) ஆணுறுப்பைத் தொட்டுவிட்டாயோ ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் “ ஆம் ” என்றேன் . “( அப்படியானால் ) எழுந்து சென்று உளூ செய்துவிட்டு வா ” என்றார்கள் . எனவே நான் எழுந்து சென்று உளூ செய்துவிட்டுத் திரும்பி வந்தேன் .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ وَالِيًا إِلَى الْيَمَنِ قَالَ لَا تَمَسَّ الْقُرْآنَ إِلَّا وَأَنْتَ طَاهِرٌ . 516
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பியபோது , “ நீ தூய்மையாளராக இருக்கும் நிலையில் தவிர குர்ஆனைத் தொடவேண்டாம் ” என்று அறிவுறுத்தினார்கள் .
عَنْ أَبِي الْغَرِيفِ قَالَ أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِوَضُوءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَغَسَلَ يَدَيْهِ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثُمَّ قَرَأَ شَيْئًا مِنْ الْقُرْآنِ ثُمَّ قَالَ هَذَا لِمَنْ لَيْسَ بِجُنُبٍ فَأَمَّا الْجُنُبُ فَلَا وَلَا آيَةَ . 517
அபுல் ஃகரீப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உளூ செய்வதற்காக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது . அவர்கள் மூன்று தடவை வாய்கொப்பளித்து , நாசிக்குத் தண்ணீர் செலுத்தினார்கள் . மூன்று தடவை தம் முகத்தைக் கழுவினார்கள் . தம் இரு கைகளையும் முழங்கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள் . பின்னர் தம் தலையைத் ( ஈரக்கையால் ) தடவினார்கள் . பிறகு தம் இரண்டு கால்களையும் கழுவினார்கள் . பின்னர் , “ இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளூ செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள் . பிறகு குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதினார்கள் . பிறகு , இ( வ்வாறு உளூ செய்வதான ) து குளியல் கடமையில்லாதவருக்குத்தான் . குளியல் கடமையானவரோ ( குர்ஆனை ) ஓதக்கூடாது ; ஒரு வசனத்தைக்கூட ( ஓதக்கூடாது )” என்றார்கள் .
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كُنَّا مَعَ سَلْمَانَ ، فَخَرَجَ فَقَضَى حَاجَتَهُ ، ثُمَّ جَاءَ ، فَقُلْتُ : يَا أَبَا عَبْدِ اللَّهِ ، لَوْ تَوَضَّأْتَ ؛ لَعَلَّنَا أَنْ نَسْأَلَكَ عَنْ آيَاتٍ . فَقَالَ : إِنِّي لَسْتُ أَمَسُّهُ ، إِنَّمَا ( لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ) فَقَرَأَ عَلَيْنَا مَا يَشَاءُ . 518
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாங்கள் சல்மான் அவர்களுடன் இருந்தோம் . ( அப்போது ) அவர்கள் வெளியே சென்று தம்முடைய சுயதேவையை நிறைவேற்றிவிட்டு , பிறகு வந்தார்கள் . ( அதன்பின் ) நான் அவர்களிடம் , “ அபூஅப்துல்லாஹ் அவர்களே ! நீங்கள் உளூ செய்துவிட்டால் நாங்கள் ( திருக்குர்ஆன் ) வசனங்களைப் பற்றி உங்களிடம் கேட்கலாம் ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ நான் அதை ( உளூ இன்றி ) த் தொடுவதில்லை . ( ஏனென்றால் ) ‘ தூய்மையானவர்களே அன்றி அதை ( மற்றவர்கள் ) தொடுவதில்லை ’ (56: 79 என்று அல்லாஹ் கூறியிருக்கிறான் ) என்பதுதான் காரணம் எனக் கூறிவிட்டு ( அதனைத் தொடாமலேயே ) நாங்கள் விரும்பிய அளவிற்கு எங்களுக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள் .
عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ فِي قَوْمٍ وَهُمْ يَقْرَءُونَ الْقُرْآنَ فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتَقْرَأُ الْقُرْآنَ وَلَسْتَ عَلَى وُضُوءٍ فَقَالَ لَهُ عُمَرُ مَنْ أَفْتَاكَ بِهَذَا أَمُسَيْلِمَةُ . 519
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் ரளியல்லாஹு அன்ஹு ஒரு சமுதாய மக்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் இருந்தார்கள் . ( பின்னர் சற்று நேரம் கழித்துத் ) தம் சுயதேவைக்காகச் சென்றுவிட்டு , பின்னர் வந்தார்கள் . ( பிறகு ) அவர்கள் குர்ஆனை ஓதினார்கள் . அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் , “ இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே ! உளூ இன்றிக் குர்ஆனை ஓதுகிறீர்களா ?” என்று கேட்டார் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ முசைலிமா ! ( உளூ இன்றிக் குர்ஆனை ஓதக்கூடாது எனும் ) இ( ச்சட்டத் ) தை யார் உமக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கினார் ?” எனக் கேட்டார்கள் .
عَنْ عَطَاءٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا مَنْ كَانَ يُقْرِئُنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُمْ كَانُوا يَقْتَرِئُونَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ فَلَا يَأْخُذُونَ فِي الْعَشْرِ الْأُخْرَى حَتَّى يَعْلَمُوا مَا فِي هَذِهِ مِنْ الْعِلْمِ وَالْعَمَلِ قَالُوا: فَعَلِمْنَا الْعِلْمَ وَالْعَمَلَ . 520
அபூஅப்திர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களிடமிருந்து ஓதிக்காட்டியவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் . அத்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பத்து வசனங்களை ஓதக் கேட்பார்கள் . ( பின்னர் ) அந்தப் பத்து வசனங்களிலும் உள்ள கல்வியை அறிந்து அவற்றைச் செயல்படுத்துகிற வரை வேறு பத்து வசனங்களைச் செவியுற மாட்டார்கள் . எனவே அவர்கள் ( இவற்றிலிருந்து ) கல்வியையும் செயல்பாட்டையும் நாங்கள் அறிந்து கொண்டோம் என்று கூறிவந்தார்கள் .
عَنْ شَرِيكٌ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : " كُنَّا إِذَا تَعَلَّمْنَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ مِنَ الْقُرْآنِ ، لَمْ نَتَعَلَّمْ مِنَ الْعَشْرِ الَّذِي نَزَلَتْ بَعْدَهَا حَتَّى نَعْلَمَ مَا فِيهِ " . قِيلَ لِشَرِيكٍ مِنَ الْعَمَلِ ؟ قَالَ : نَعَمْ . 521
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனிலிருந்து பத்து வசனங்களைக் கற்றுக்கொண்டால் , அவற்றில் உள்ளதை நாங்கள் அறிந்து கொள்கின்ற வரை அதன் பிறகு இறங்கிய பத்து வசனங்களைக் கற்றுக்கொள்ள மாட்டோம் . அப்போது ஷரீக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “( எதைக் கற்றுக்கொள்கிற வரை ? அவற்றின்படி ) செயல்படுவதையா ?” என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர்கள் , “ ஆம் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : لَقَدْ عِشْتُ بُرْهَةً مِنْ دَهْرٍ وَإِنَّ أَحَدَنَا يُؤْتَى الْإِيمَانَ قَبْلَ الْقُرْآنِ ، وَتَنْزِلُ السُّورَةُ عَلَى مُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَتَعَلَّمُ حَلَالَهَا وَحَرَامَهَا وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهَا كَمَا تَعَلَّمُونَ أَنْتُمُ الْقُرْآنَ ، ثُمَّ لَقَدْ رَأَيْتُ رِجَالًا يُؤْتَى أَحَدُهُمُ الْقُرْآنَ قَبْلَ الْإِيمَانِ ، فَيَقْرَأُ مَا بَيْنَ فَاتِحَةِ الْكِتَابِ إِلَى خَاتِمَتِهِ مَا يَدْرِي مَا آمِرُهُ وَلَا زَاجِرُهُ ، وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهُ ، وَيَنْثُرَهُ نَثْرَ الدَّقَلِ . 522
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் எங்கள் காலத்தில் சற்று நிம்மதியாக வாழ்ந்திருக்கிறோம் . எங்களுள் ஒருவர் குர்ஆனுக்கு முன்பே இறைநம்பிக்கை ( ஈமான் ) வழங்கப்பட்டார் . முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஓர் அத்தியாயம் இறங்கும் . ( அதன்பின் ) அவர் அது ஆகுமாக்குவதையும் தடைசெய்வதையும் அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அவற்றையெல்லாம் - இன்று நீங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வதைப் போன்று - கற்றுக்கொள்வார் . பிறகு இன்றைய ஆண்களைப் பார்க்கிறேன் . அவர்களுள் ஒருவர் இறைநம்பிக்கைக்கு முன்னரே குர்ஆன் கொடுக்கப்பட்டுள்ளார் . எனவே அவர் அதனை ஃபாத்திஹா அத்தியாயத்திலிருந்து அதன் கடைசி ( அத்தியாயம் ) வரை ஓதுகிறார் . ( ஆனால் ) அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் ( என்னவென்று ) அறியமாட்டார் . அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அதையும் அறியமாட்டார் . ( மாறாக பேரீச்ச மரம் ) காய்ந்த மட்டமான பேரீச்சம் பழங்களை உதிர்ப்பதைப் போன்று உதிர்ப்பார் .
عَنْ عِكْرِمَةَ بْنَ سُلَيْمَانَ ، يَقُولُ : قَرَأْتُ عَلَى إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسْطَنْطِينَ ، فَلَمَّا بَلَغْتُ وَالضُّحَى ، قَالَ لِي : " كَبِّرْ كَبِّرْ عِنْدَ خَاتِمَةِ كُلِّ سُورَةٍ ، حَتَّى تَخَتِمَ " وَأَخْبَرَهُ عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ أَنَّهُ قَرَأَ عَلَى مُجَاهِدٍ فَأَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ مُجَاهِدٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ ابْنُ عَبَّاسٍ أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ أَمَرَهُ بِذَلِكَ وَأَخْبَرَهُ أُبَيُّ بْنُ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أَمَرَهُ بِذَلِكَ . 523
இக்ரிமா பின் சுலைமான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ( குர்ஆனை முழுவதுமாக ) இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் பின் கிஸ்த்தன்தீன் அவர்களிடம் ஓதிக்காட்டினேன் . நான் வள்ளுஹா அத்தியாயத்தை அடைந்தபோது , அவர்கள் என்னிடம் , “( இதன்பிறகு ) ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் ( அதன் ) கடைசி ( அத்தியாயம் ) வரை தக்பீர் கூறுவீராக ” என்று சொன்னார்கள் . இச்செய்தியை அவருக்கு அப்துல்லாஹ் பின் கஸீர் ரஹிமஹுல்லாஹ் அறிவித்தார்கள் . அவர்கள் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்காட்டியபோது , அதனை அவருக்குக் கட்டளையிட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அவ்வாறு கட்டளையிட்டதாக முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் . உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் .